உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Thursday, October 6, 2011

தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பத்துமா 10 நாட்கள்?

பிரசாரம் செய்வதற்கு இன்னும் 10 நாட்களே மீதமிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கவில்லை; குறிப்பாக, நகரப்பகுதிகளில் தேர்தலுக்கான அறிகுறியே தெரியாமல் இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. பிரசாரத்துக்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களுக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சுயேச்சைகளுக்கு சின்னம் தெரிந்த பின்பே, பிரசாரத்துக்குத் தயாராக முடியும்; அரசியல்கட்சிகளுக்கு அப்படியில்லை.வேட்புமனு முடிந்த நாளிலேயே, வேட்பாளர் இவர்தான் என்று முடிவாகி விட்டதோடு, சின்னத்தை வைத்து ஓட்டுக் கேட்பதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், கோவையில் அரசியல்கட்சிகளின் வேட்பாளர்களைப் பிரசாரத்தில் பிடிப்பதும் குதிரைக் கொம்பாகவுள்ளது. பெரும்பாலான வேட்பாளர்கள், பிரசாரத்தைத் துவக்கவே இல்லை என்று தெரிகிறது.

கோவை மாநகராட்சியில் மேயருக்கு 27 பேரும், கவுன்சிலர் பதவிகளுக்கு 886 பேரும் போட்டி போடுகின்றனர். மேயருக்குப் போட்டியிடுபவர்களில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே ஆங்காங்கே பிரசாரம் செய்வதைப் பார்க்க முடிகிறது. அவர்களுடைய பிரசாரத்திலும் சுவராஸ்யத்தையோ, அரசியல் சூட்டையோ பார்க்க முடியவில்லை.யாருடைய ஊழலைப் பற்றியும், சொத்துக் குவிப்பைப் பற்றியும் யார் பேசினாலும், அதுவே "பூமராங்' ஆக நமக்குத் திரும்பி விடுமோ என்ற அச்சம், அரசியல்கட்சியினரிடம் தெரிகிறது. தி.மு.க.,வினரின் பிரசாரத்தில் "செய்த வளர்ச்சிப்பணிகள்' முக்கியப் பங்கு வகிக்கின்றன. அ.தி.மு.க., பிரசாரத்தில், "ஆளும்கட்சி ஜெயிப்பதே நல்லது' என்ற எச்சரிக்கை தெரிகிறது.

கோவையிலுள்ள 100 வார்டுகளில், சுயேச்சைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும், அரசியல் கட்சியினரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பலர், அரசியல் கட்சிகளில் "சீட்' கிடைக்காமல், போட்டிக்காக நிற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கட்சி வேட்பாளர் பலருக்கும் கட்சி ஓட்டுக்கள் முழுதாகக் கிடைப்பது சந்தேகமே.மாநகராட்சி விரிவாக்கத்துக்குப் பின்பு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், பெரும்பாலான மக்களுக்கு தங்களது வீடு, எந்த வார்டில் உள்ளது என்பதே தெரியவில்லை. இந்நிலையில், தங்களது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அபூர்வமே. மீதமிருக்கும் 10 நாட்களுக்குள் சின்னத்தையும், பெயரையும் தெரிய வைப்பது வேட்பாளர்களுக்கு சவால்தான்.நகரப் பகுதிகளில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் என எதையுமே விளம்பரம் செய்யக்கூடாது என்று எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் உள்ளதால், வீடு வீடாக நோட்டீஸ் கொடுப்பதைத் தவிர, வேட்பாளர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால், நோட்டீஸ் அடித்துக் கொண்டு, வீடு வீடாக "கேன்வாஸ்' செய்யும் வேலையில் வேட்பாளர்கள் இறங்கி விட்டனர்.

அதிலும் விரிவாக்கப் பகுதிகளில், வார்டுகளின் பரப்பும், வாக்கு எண்ணிக்கையும் மிக அதிகமாக இருப்பதால், அனைத்து வீடுகளுக்கும் செல்வது, அத்தனை சாத்தியமில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் வேட்பாளர்கள் குழம்பியிருக்க, யார் எந்தக் கட்சியில் நிற்கிறார், அவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியாமல் வாக்காளர்களும் குழம்பிக் கிடக்கின்றனர்.ஆனால், கடந்த ஆட்சியின்போது, அபரிமிதமாகச் சம்பாதித்த ஆளும்கட்சி கவுன்சில ர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்ற எண்ணம், மக்களிடம் பரவலாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் மீறி, மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள், ரொம்பவே மெனக்கட வேண்டுமென்று தெரிகிறது.

தங்களது கட்சித் தலைவர்கள், பிரசாரத்துக்கு வருவதால் மக்களிடம் ஆதரவு கிடைக்குமென்ற நம்பிக்கை, அக்கட்சியினரிடம் கூட காணப்படவில்லை. களப்பணி செய்து, ஏதாவது ஒரு வகையில் வாக்காளரைக் கவர்ந்தால் மட்டுமே, ஜெயிக்க முடியுமென்று வேட்பாளர்கள் நம்புவதால், அதற்கான ஆலோசனைகள் நடக்கின்றன என்பதுதான் தேர்தலின் இப்போதைய நிலவரம்.

வரட்டுமே எல்லோரும்!
முந்தைய உள்ளாட்சித் தேர்தல் எதிலும் இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலின்போது, ஊழலுக்கு எதிரான பிரசாரம் வலுத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. அரசியல் கட்சிகளின் மீதான ஊழல் புகார், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை விட, உள்ளூரில் சம்பாத்தியம் செய்த கவுன்சிலர்களுக்கு எதிரான கோபம், மக்களிடம் நிறையவே தெரிகிறது.அதனால், இந்தத் தேர்தலில், அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, அதிகளவிலான சுயேச்சைகளை மக்கள் ஆதரிக்கவும் வாய்ப்புண்டு. சுயேச்சைகளை மட்டுமின்றி, ஊழலுக்கு எதிராகப் போராடியவர்கள், வளர்ச்சிக்குக் குரல் கொடுத்தவர்கள், நேர்மையானவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களையும் ஆதரிக்க வேண்டியது, வாக்காளர்களின் கடமையாகும்.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...