உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Monday, September 26, 2011

பதவியை ஏலம்விட்டால் கடும் தண்டனை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பதவியிடங்களை ஏலம்விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில், எதிர்வரும் 17-10-2011 மற்றும் 19-10-2011 ஆகிய இரு நாட்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மாநிலத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏல முறையில் கைப்பற்ற முயற்சிகள் செய்வதாகவும், இந்த செயல்களில் ஒரு சில ஊர் பிரமுகர்கள் கூட்டாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பெறப்படுகின்றன.

இந்த செயல்கள் கடுமையாக கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டியதாகும். மேலும், இது கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கவும் வழிவகுக்கும்.

எனவே, இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் கவனமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று வரப்பெறும் தகவல்கள் மீது உடனடியாக விசாரித்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 29-9-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், அனைத்து பதவிகளுக்கும் 24-9-2011 (சனிக்கிழமை) வரை மொத்தம் 25,723 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், வேட்புமனு தாக்கல் செய்ய 29-9-2011 தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில நாட்களிலேயே வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதை அதிகம் பேர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்புமனுக்களை பெறும் தேர்தல் அலுவலர்கள், அதிகமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கக்கூடிய நாட்களில் கூடுதல் பணியாளர்களை இதற்கென அமர்த்தி சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விதிகளுக்குட்பட்டு தாமதமின்றி வேட்புமனுக்களை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவுறுத்தியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...